search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் கமிஷனர்"

    பிரதமர் மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை என தலைமை தேர்தல் கமிஷனர் பதில் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

    தேர்தலில் நரேந்திர மோடி, அமித்ஷா மீது கூறப்பட்ட நடத்தை விதிமீறல் புகாரில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கவில்லை. தகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது. இதனை கமிஷனர் அசோக் லாவசா அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தார். நான் யாருக்கும் நன்னெறி நீதிபதி அல்ல. லாவசாவைவிட சற்று மூத்தவன். அவருடைய உணர்வுகள் எப்படி இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் பொய் சொன்னதில்லை.



    தேர்தல் கமிஷனில் அனைவரும் ‘ஜெராக்ஸ் காப்பிகள்’ இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கிறது. பேசுவதற்கும் ஒரு நேரம், அமைதியாக இருப்பதற்கும் ஒரு நேரம் இருக்கிறது. நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால் ஒன்று அது ஒருமித்த கருத்தாக இருக்கும் அல்லது பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பேற்றுக்கொண்ட சுனில் அரோரா பாராளுமன்ற தேர்தலை நடத்த தயாராகி வருகிறோம் என்று கூறினார். #SunilArora #ParliamentElection
    புதுடெல்லி:

    இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக ஓ.பி.ராவத் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவி காலம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) முடிவடைந்தது. இதையொட்டி தேர்தல் கமிஷனர்களில் ஒருவரான 62 வயது சுனில் அரோராவை தலைமை தேர்தல் கமிஷனராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் நியமித்தார்.

    இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் தலைமை அலுவலகத்தில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனராக சுனில் அரோரா பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இப்பதவியை வகிப்பார். இவர் நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனர் ஆவார்.



    இவருடைய தலைமையில்தான் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் காஷ்மீர், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளது.

    பதவி ஏற்ற பிறகு நிருபர்களிடம் சுனில் அரோரா கூறியதாவது:-

    நாட்டில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும், நம்பகத்தன்மையுடனும், பாரபட்சம் இன்றியும், நெறிமுறைகளோடு முற்றிலும் அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முன்னுரிமை அளிக்கும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் மிகுந்த கவனத்துடன் நடத்தப்படும்.

    இதற்காக பொதுமக்கள், தேர்தல் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் எங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பை அளிக்கவேண்டுகிறோம்.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேர்தல் கமிஷன் இப்போதே தயாராகி வருகிறது.

    குறிப்பாக மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் ஒப்புகை சீட்டு எந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைப்பது உள்பட அனைத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தேர்தல் குறித்தும், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தலில் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு சுனில் அரோரா பதில் அளிக்கையில், “இது தொடர்பாக துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்கா இந்த மாத இறுதியில் அறிக்கை தாக்கல் செய்வார். அதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

    1980-ம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் அரோரா நிதி, ஜவுளி, திட்டக் கமிஷன் அமைச்சகங்களில் பணியாற்றியவர்.

    1999-2002-ம் ஆண்டுகளில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் இணை செயலாளராகவும், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை நிர்வாக இயக்குனராக 5 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளார். 36 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி தேர்தல் கமிஷனராக அவர் நியமிக்கப்பட்டார்.  #SunilArora #ParliamentElection
    தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த இப்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

    தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.

    தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

    போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)

    தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.

    இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.

    எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.

    செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChiefElectionCommissioner #OPRawat
    ×