search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OP Rawat"

    திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க காரணம், பிறரின் அழுத்தங்கள் அல்ல என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் திட்டவட்டமாக கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
    புதுடெல்லி :

    திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ், கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி திடீர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதே போன்று திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் இவ்விரு தொகுதிகளும் காலியாக உள்ளன.

    மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களுடன், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக்கொண்டதே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தேர்தல் கமிஷனுக்கு வந்த அழுத்தங்களே இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு காரணம் என தமிழக அரசியல் கட்சிகள் கருத்து வெளியிட்டன.

    இந்நிலையில் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு காரணங்கள் குறித்து அவர் கூறியதாவது :-

    யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPRawat #ElectionCommissionofIndia
    தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த இப்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார். #ChiefElectionCommissioner #OPRawat
    புதுடெல்லி:

    டெல்லியில் ‘இந்திய தேர்தல் ஜனநாயகத்துக்கு உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகம், யதார்த்தத்தில் இயங்காது. ஜனநாயகத்துக்கு என்று ஒரு துணிச்சல், தன்மை, நேர்மை, அறிவு தேவைப்படுகிறது. அவைகளெல்லாம் இப்போது மங்கிப்போய் கொண்டிருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அவையெல்லாம் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

    தூய்மையான தேர்தல்கள், தலைமைக்கு சட்டப்பூர்வமான வசந்தம் போல் இருக்கும்.

    தேர்தல்கள் மாசுபட்டால், நாட்டு மக்கள் ஒட்டுமொத்த நிர்வாக அமைப்பின் மீதும் குறை கூறுவார்கள். எனவே இது கவனிக்க வேண்டிய அம்சம் ஆகும்.

    போலிச்செய்திகள் வெளியாவதும், மக்களை நம்ப வைப்பது பெருகி வருவதும், தகவல்கள் திருட்டு நடைபெறுவதும், லாபம் பார்ப்பதும், தகவல் தொடர்பை குறிவைத்து செயல்படுதலும் நடக்கின்றன.

    நமது நாட்டைப் பொறுத்தமட்டில் சைபர் பாதுகாப்பு (இணைய பாதுகாப்பு), தகவல் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதை தேர்தல் கமிஷன் உணர்ந்து இருக்கிறது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா போன்று சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வோம். (கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்பது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் உபயோகிப்பாளர்களின் தகவல்களை திருடி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம் ஆகும்.)

    தேர்தல்களில் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது பற்றி பேசப்படுகிறது. தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதை உறுதி செய்வதற்கு தற்போதைய சட்டங்கள் போதாது. எனவேதான் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்வது இப்போது சாத்தியம் இல்லை.

    இந்தியாவில் இப்போது தேர்தல்களில் பணம் ஆதிக்கம் செலுத்துவது என்பது கவலை அளிக்கிற பிரச்சினையாக உள்ளது. பிரசாரத்துக்கு பணம் செலவு செய்வதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர வேண்டும் என்று நிறைய பேசப்படுகிறது. வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

    ஆனால் இவை தொடர்பாக இப்போதுள்ள சட்டங்கள், இந்த விவகாரங்களை கவனிப்பதற்கு போதுமானவை அல்ல.

    எனவேதான் இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி வந்து உள்ளது.

    செய்தி ஊடகங்களை பயனுள்ள விதத்தில் பயன்படுத்துதல், போலி செய்திகள் நடமாட்டத்தை குறைத்தல், பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுதல் ஆகியவை குறித்தும் கவனிக்க வேண்டியது இருக்கிறது. இது தொடர்பாகவும் தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது. சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களை நிர்வகிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ChiefElectionCommissioner #OPRawat
    ×