செய்திகள்

பா.ஜ.க.வில் இணைய ஒரு கோடி ரூபாய் பேரம்: ஹர்திக் படேல் கூட்டாளி பரபரப்பு பேட்டி

Published On 2017-10-23 04:47 GMT   |   Update On 2017-10-23 04:47 GMT
பா.ஜ.க.வில் இணைவதற்கு ஒரு கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக குஜராத் மாநிலத்தில் படேல் இன இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்திய ஹர்திக் படேலின் கூட்டாளி நரேந்திர படேல் கூறியுள்ளார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல் என்பவர் போராட்டம் நடத்தினார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதால், இவர்மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்றது.

ஹர்திக் படேலின் ஆதரவாளர்களாக கருதப்படும் வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தனர்.

மற்றொரு கூட்டாளியான நரேந்திர படேல், தான் பா.ஜ.க.வில் இணைந்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், முன்பணமாக ரூ.10 லட்சம் அக்கட்சியிலிருந்து தந்ததாகவும் இன்று பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

நரேந்திர படேலின் பேட்டியை அடுத்து, ஏற்கனவே பா.ஜ.க.வில் இணைந்த மற்றொரு படேல் தலைவர் நிகில் சவானி கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
Tags:    

Similar News