செய்திகள்

ஐதராபாத்: சாலை பள்ளங்களை சரிசெய்து வரும் சமூக ஆர்வலர்

Published On 2017-10-21 21:21 GMT   |   Update On 2017-10-21 21:21 GMT
ஐதராபாத்தில் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்து வரும் சமூக ஆர்வலரான ஓய்வுபெற்ற ரெயில்வே இன்ஜினியர் திலக்கிற்கு அபகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஐதராபாத்:

ஐதராபாத்தில் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்து வரும் சமூக ஆர்வலரான ஓய்வுபெற்ற ரெயில்வே இன்ஜினியர் திலக்கிற்கு அபகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கங்காதர திலக் கட்னாம். இவர் தெற்கு மத்திய ரெயில்வேயில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். கடந்த 2008-ல் ஓய்வுபெற்ற பின்னர் அமெரிக்கா சென்றார். அடுத்த ஆண்டு அங்கிருந்து திரும்பியதும் ஐதராபாத்தில் கம்பெனி தொடங்கினார்.



முதல் நாளில் திலக் தனது கம்பெனிக்கு காரில் சென்றார். சாலையில் உள்ள பள்ளங்களில் கார் சென்றதால் ஏற்பட்ட வலியும், பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் பள்ளி செல்லும் குழந்தைகளின் சீருடைகள் மீது படுவதையும் கண்டு அதிர்ந்தார்.

இதற்கு ஒரு முடிவு காண விரும்பினார். முதலில், சாலை பள்ளங்களை மூடுவது குறித்து போலீசார் மற்றும் காண்ட்ராக்டர்களிடம் பேசினார். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதையடுத்து, சாலை பள்ளங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட முடிவு செய்து, தனது சேமிப்பில் இருந்த பணத்தை பயன்படுத்தி வந்தார். இதற்காக சாலை பள்ளங்களை மூடுவதற்காக சாலை ஆம்புலன்ஸ் வண்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் சாலை பள்ளங்களை மூடி வருகிறார். இதுவரை 1302 சாலை பள்ளங்களை மூடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதுதொடர்பாக திலக் கூறுகையில், சாலை பள்ளங்களில் சிக்கி காயம் அடைந்து வருபவர்கள் சில நேரம் சிகிச்சை பலனின்றி  இறந்து விடுகின்றனர். எனவே தான் சாலை பள்ளங்களை மூடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.



சாலை பள்ளங்களை தனது சொந்த செலவில் சரிசெய்து வரும் இவருக்கு, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News