செய்திகள்

பீகாரில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் காயம்

Published On 2017-10-20 10:17 GMT   |   Update On 2017-10-20 10:17 GMT
பீகார் மாநிலத்தில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

பாட்னா:

பீகார் மாநிலத்தின் சமஸ்திபுர் பகுதியில் ஒரு மருந்து விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்துள்ளனர். 

அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் போலீசாரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதனால் போலீசார் பின்வாங்கியுள்ளனர். போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் அப்பகுதியிலுள்ள தாஜ்புர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு போலீஸ் வாகனத்திற்கு தீவைத்துள்ளனர். இதையடுத்து அவர்களை விரட்டியடிப்பதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மரணமடைந்தவர் பெரோகதா கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் பண்டாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரணவ் குமார், காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜனன் ஆகியோர் அப்பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News