செய்திகள்

சுனந்தா புஷ்கர் கொலை நடந்த ஓட்டல் அறைக்கு வைத்த சீல் 3 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது

Published On 2017-10-16 10:29 GMT   |   Update On 2017-10-16 10:29 GMT
காங்கிரஸ் தலைவர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் பிணமாக கிடந்த டெல்லி நட்சத்திர ஓட்டல் அறைக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் (வயது 58), 2 முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில், காஷ்மீர் தொழில் அதிபர் சுனந்தா புஷ்கரை(52) கடந்த 2010–ம் ஆண்டு, ஆகஸ்டு 22–ந்தேதி காதல் திருமணம் புரிந்தார்.

ஆனால், திடீரென சசிதரூருடன், பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தரார் இணைத்து பேசப்பட்டார். சசி தரூர்–சுனந்தா மண வாழ்வில் அவர் புயலாக நுழைந்ததாகவும், இதனால் கணவன்–மனைவி இருவரிடையே சண்டைகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17–ந் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இதில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அங்குள்ள அமெரிக்க புலனாய்வு நிறுவனத்துக்கு சொந்தமான நவீன ஆய்வகத்தில் அவை பரிசோதிக்கப்பட்டன. அந்த பரிசோதனையின் அறிக்கை டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை எய்ம்ஸ் மருத்துவமனை வல்லுனர்கள் கடந்த ஆண்டு வெளியிட்டர்.

சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கு விஷம்தான் காரணம் என உறுதிபட தெரியவந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், சுனந்தா புஷ்கர் பிணமாக கிடந்த ஓட்டல் அறைக்கு விசாரணை அதிகாரிகள் வைத்திருந்த சீல் அகற்றப்பட வேண்டும் என டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஓட்டல் நிர்வாகம் முறையீடு செய்திருந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தடயங்களை அங்கிருந்து எடுத்துகொண்டு அறைக்கு வைக்கப்பட்டிருந்த சீலை அகற்றி ஒப்படைக்குமாறு கடந்த மாதம் 12-ம் தேதி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதற்கு முன்னதாகவும் இருமுறை சீலை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், போலீசார் உடனடியாக சீலை அகற்றாததை ஓட்டல் நிர்வாகம் மாஜிஸ்திரேட்டுக்கு நினைவுபடுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாஜிஸ்திரேட் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற தவறிய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தனர். இன்னும் ஆறு நாட்களுக்குள் சீலை அகற்றி அந்த அறையை ஓட்டல் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கடந்த பத்தாம் தேதி அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அந்த அறைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தெரிவித்ததையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார்.

Tags:    

Similar News