செய்திகள்

அரியானாவில் மாட்டிறைச்சி கடத்தியதாக ஊனமுற்றவரை எரிக்க முயற்சி

Published On 2017-10-15 08:12 GMT   |   Update On 2017-10-15 08:12 GMT
அரியானாவில் மாட்டிறைச்சி கடத்தியதாகக் கூறி ஊனமுற்ற வாலிபரை எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரிதாபாத்:

வட மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு எதிராக ஒரு பிரிவினர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அரியானாவில் மீண்டும் தாக்குதல் நடந்துள்ளது.

இங்கு பரிதாபாத்தில் ஊனமுற்ற வாலிபரான ஆசாத் என்பவர் ரிக்‌ஷா ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். அங்குள்ள இறைச்சி கடைக்காரரிடம் வாடகைக்கு ரிக்‌ஷா ஓட்டுவது வழக்கம்.

நேற்று இவர் ரிக்‌ஷா ஓட்டிச் சென்ற போது 2 பேர் வழி மறித்தனர். மாட்டிறைச்சி கடத்துகிறாரா? என்று கூறி அவருடன் தகராறு செய்தனர். அதற்கு ரிக்‌ஷாக்காரர் போலீஸ் நிலையம் வாருங்கள் சோதனையிடலாம் என்று கூறினார். இதனை ஏற்க மறுத்த 2 பேரும் செல்போனில் சிலரை வரவழைத்தனர். 6 பேர் சேர்ந்து வாலிபர் ஆசாத்தை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதில் ஆசாத் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அதன் பிறகு திடீர் என்று அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைக்க முயன்றனர். தீக்குச்சியை உரசிய போது போலீஸ்காரர் ஒருவர் அங்கு ஓடி வந்து வாலிபரை மீட்டார். இதனால் அவர் உயிர் தப்பினார்.

போலீசைப் பார்த்ததும் கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயமடைந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து கும்பலை தேடி வந்தனர். அப்போது வாலிபரை தாக்கிய 7 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் துணை கமி‌ஷனர் அஸ்தா மோடி தெரிவித்தார்.
Tags:    

Similar News