செய்திகள்

வரதட்சணை வாங்காதவர்கள் என்னை திருமணத்துக்கு அழைக்கலாம்: நிதிஷ் குமார்

Published On 2017-10-09 13:58 GMT   |   Update On 2017-10-09 15:38 GMT
வரதட்சணை வாங்காதவர்கள் திருமணத்துக்கு மட்டுமே நான் செல்வேன் என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கடந்த காந்தி ஜெயந்தி நாளன்று வரதட்சணை மற்றும் சிறார் திருமணத்துக்கு எதிரான பிரசார இயக்கத்தை தொடங்கினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 21-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மனித சங்கிலி நிகழ்ச்சியையும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். உங்களுக்கு திருமனம் ஆனபோது நீங்கள் வரதட்சணை வாங்கவில்லையா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், 1973-ம் ஆண்டு எனக்கு திருமணம் ஆனபோது நான் வரதட்சணை ஏதும் வாங்கவில்லை என தெரிவித்தார்.

பாட்னா பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் நடைபெற்ற என் திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது பேச்சில் வரதட்சணைக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்திருந்தனர். இந்த வேளையில் இதை நினைவுப்படுத்தி கேள்வி எழுப்பிய நிருபருக்கு நன்றி என கூறிய அவர் தனது மனைவி பத்தாண்டுகளுக்கு முன்னர் காலமானதை எண்ணி வேதனைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே, என்னை திருமணத்துக்கு அழைக்க விரும்புவர்கள் வேறு எந்த வாக்குமூலமும் பதிவு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் வரதட்சணை வாங்கவில்லை என மணமகன் வீட்டார் உறுதி அளித்தால் போதும்.

இந்திய குற்றவியல் ஆவண காப்பகத்தில் கண்டுள்ளபடி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 26-வது இடத்தில் இருக்கும் பீகார் மாநிலம், வரதட்சணை தொடர்பான கொடுமைகளில் நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் வரதட்சணை கொடுமை தொடர்பான 4,852 வழக்குகள் பதிவாகியுள்ளன. 987 வரதட்சணை மரணங்களும், நாட்டில் நடைபெற்ற குழந்தை திருமணங்களில் 39 சதவீதம் பீகாரில் நடைபெற்றுள்ளது எனவும் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News