செய்திகள்

குஜராத்தில் நான்கு வழிப்பாதை தொங்கு பாலம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2017-10-07 08:43 GMT   |   Update On 2017-10-07 08:43 GMT
குஜராத் மாநிலத்தில் ரூ.962.43 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிப்பாதை தொங்கு பாலத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி வைத்தார்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய துவாரகா நகரையும் புதிய துவாரகா நகரையும் இணைக்கும் வகையில் 2.32 கிலோமீட்டர் நீளத்துக்கு தொங்கும் பாலம் அமைக்க மாநில அரசு தீர்மானித்தது. 27.20 மீட்டர் அகலம் கொண்ட நான்கு வழிப்பாதையாக அமைக்கப்படும் இந்த பாலத்தின் இருபுறமும் 2.50 மீட்டர் அகலம் கொண்ட நடைபாதை மற்றும் சூரிய மின்சாரத்தின் மூலம் எரியும் சாலை விளக்கு என நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.



இதற்கு முன்னர் இந்தப் பகுதிக்கு செல்ல படகுகள் மற்றும் பரிசல்களை மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், துவாரகா நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய பாலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். புதிய துவாரகாவுடன் பழைய துவாரகா நகரை இணைக்கும் இந்தப் பாலம் துவாரகா தீவில் உள்ள மக்களுக்கும் பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கான ஏராளமான அம்சங்கள் இருந்தாலும், பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு குஜராத்தை வஞ்சித்து விட்டதாக அவர் குற்றம்சாட்டினார். இன்றும் நாளையும் குஜராத்தில் தங்கி இருக்கும் பிரதமர் மோடி பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
Tags:    

Similar News