செய்திகள்

விஜய்மல்லையா புதிய மோசடி: ரூ.6 ஆயிரம் கோடி வங்கி கடனை போலி நிறுவனங்களுக்கு மாற்றியதாக புகார்

Published On 2017-09-25 05:59 GMT   |   Update On 2017-09-25 07:48 GMT
விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனில் ரூ.6,027 கோடியை போலி நிறுவனங்களுக்கு மாற்றி இருந்தது தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. கிங்பி‌ஷர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை.

இதுதொடர்பாக விஜய் மல்லையா மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து இருந்தது.

இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தபோதே விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு சென்று விட்டார். அதன்பிறகு அவர் நாடு திரும்பவில்லை. அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்து இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். உடனே அவர் ஜாமீனில் விடுதலையானார். அவரை நாடு கடத்த கோரும் வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் நடக்கிறது.

இங்கிலாந்து நாட்டிலும் விஜய் மல்லையா சட்ட விரோத பண பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் மல்லையா வங்கிகளிடம் இருந்து பெற்ற கடனில் ரூ.6,027 கோடியை போலி நிறுவனங்களுக்கு மாற்றி இருந்தது தெரியவந்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து உள்பட 7 நாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு அவர் பணத்தை இடம் மாற்றம் செய்து இருந்ததை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அனைத்து தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

இந்த ஆதாரங்களை வைத்து விஜய் மல்லையா மீது புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் பணியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த முறை ஆதார ஆவணங்களோடு விஜய் மல்லையா சிக்கி இருப்பதால் அவரை நாடு கடத்தி கொண்டு வரும் பணி எளிதாக அமையும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் அளித்து நாடு கடத்தும் பணியில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபடும்.
Tags:    

Similar News