செய்திகள்

ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கு: பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Published On 2017-09-22 10:41 GMT   |   Update On 2017-09-22 10:41 GMT
ஹவாலா பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 6-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியை சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளரான மொயின் குரேஷி பெரும் அளவிலான பணத்தை துபாய், லண்டன் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததை கடந்த 2014-ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் கண்டுபிடித்தனர். 

அதைத்தொடர்ந்து, அவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் விடுதலையான அவரிடம் அமலாக்கத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் வங்கிகளில் பல லாக்கர்கள் அவரது ஊழியர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. அவை குரேஷிக்கு உரியவை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவு மொயின் குரேஷியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சுமார் பத்து நாட்கள் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் கடந்த 8-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மொயின் குரேஷியை செப்டம்பர் 22-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்குமாறு சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார். 


அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.
Tags:    

Similar News