செய்திகள்

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

Published On 2017-09-21 08:58 GMT   |   Update On 2017-09-21 08:58 GMT
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்திலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்வதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதிகள், மூன்று பொதுத் தேர்தல்களுக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ள நிலையில் சட்டம் நிறைவேறினால்தான் பாராளுமன்றத்திலும் 33 சதவீதம் பெண்கள் இடம் பெறமுடியும் என்ற நிலை உள்ளது. சில கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த வரைவு சட்டம் நீண்ட காலமாக பேச்சளவிலேயே உள்ளது.

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 2010-ம் ஆண்டு இந்த சட்டம் பாராளுமன்ற மேல்சபையில் நிறைவேறியது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றப்பட முடியாமல் இந்த சட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மக்களவையிலும் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களவையில் பெரும்பான்மை வகித்து வரும் நீங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை  விரைவில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News