செய்திகள்

கோவில் கோவிலாக செல்லும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்: மைசூர் தசரா விழாவில் பங்கேற்பு

Published On 2017-09-21 06:57 GMT   |   Update On 2017-09-21 06:57 GMT
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள். மைசூர் தசரா விழாவிலும் பங்கேற்க உள்ளனர்.

பெங்களூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரை ஆதரிக்கும் 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து வழக்கை அடுத்த மாதம் 4-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இது தினகரன் ஆதரவாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இனி அக்டோபர் 4-ந் தேதி கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். அதுவரை அவர்கள் குடகு விடுதியிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளனர்.


தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் 16 பேர் மட்டும் குடகு விடுதியில் தங்கி உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோர் வேறு இடத்தில் தங்கி உள்ளனர். 16 பேரில் சிலர் காரில் வெளியே சென்று கோவில், கோவிலாக சுற்றி வருகிறார்கள்.

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கும் சென்று வந்தனர். இதுதவிர தலைக்காவிரியில் புனித நீராடினார்கள். இன்று மைசூரில் தசரா விழா தொடங்கியது.

மீண்டும் அவர்கள் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்றுவிட்டு தசரா விழாவை பார்வையிட்டு விட்டு தமிழகம் திரும்ப திட்டமிட்டு உள்ளனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் மாரியப்பன் கென்னடிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர் டாக்டரிடம் சிகிச்சை பெற விடுதியை விட்டு அடிக்கடி காரில் சென்று வருகிறார்.

இவர்களைத் தவிர எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி உள்ளிட்ட மற்ற அனைவரும் தொடர்ந்து குடகு விடுதியில் தங்கியுள்ளனர்.

Tags:    

Similar News