செய்திகள்

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை

Published On 2017-09-19 22:44 GMT   |   Update On 2017-09-19 22:44 GMT
போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததால், சசிகலா, அந்த கம்பெனிகளில் இயக்குனர் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி:

போலி நிறுவனங்கள் நடத்தி வந்ததால், சசிகலா, அந்த கம்பெனிகளில் இயக்குனர் பதவி வகிக்க தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பெயரளவில் இயங்கிக்கொண்டு, எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பெரும் நிதி பரிமாற்றங்களில் ஈடுபட்ட போலி நிறுவனங்களை அடையாளம் காணும் பணியில் மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை ஈடுபட்டது. இதில் நாடு முழுவதும் 2 லட்சம் போலி கம்பெனிகள் இருப்பதை கண்டறிந்து, அவற்றின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கி உள்ளது.

அது மட்டுமின்றி, அந்த போலி கம்பெனிகளின் இயக்குனர் பதவியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரத்து 578 பேரை நீக்கி உள்ளது. இவர்கள் 5 ஆண்டுகளுக்கு எந்த கம்பெனியிலும் இயக்குனர் பதவி வகிக்க முடியாதபடிக்கு தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் போலி கம்பெனிகளை நடத்தி வந்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களை மத்திய அரசு அம்பலப்படுத்தி உள்ளது.

தற்போது சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிற அ.தி.மு.க. (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவும் போலி கம்பெனிகள் நடத்தி, எந்த வர்த்தக நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், பெருமளவில் பண பரிவர்த்தனை செய்து வந்ததை மத்திய அரசு கண்டுபிடித்தது. சசிகலா, பேன்சி ஸ்டீல்ஸ் உள்ளிட்ட 4 போலி கம்பெனிகளை நடத்தி வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து சசிகலாவை இயக்குனர் பதவி வகிப்பதில் இருந்து மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை தடை செய்துள்ளது.

சசிகலாவைப் போன்று கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, வளைகுடா தொழில் அதிபர் எம்.ஏ. யூசுப் அலி உள்ளிட்டவர்கள் போலி கம்பெனிகளை நடத்தி வந்துள்ளனர்.

இவர்களும் இயக்குனர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News