செய்திகள்

பீகாரில் ஒரு வி.ஐ.பி.க்கு 3 போலீஸ்: 1 லட்சம் பேருக்கு 192 போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-09-18 09:26 GMT   |   Update On 2017-09-18 09:26 GMT
பீகாரில் ஒரு வி.ஐ.பி.க்கு 3 போலீசார் பாதுகாப்பு என்ற விகித அடிப்படையில் உள்ளது. ஆனால் மக்கள் தொகையில் 1 லட்சம் பேருக்கு 192 போலீசார் என்ற விகிதாச்சாரத்தில் போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

புதுடெல்லி:

நாட்டில் உள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்தியாவில் மொத்தம் 19 லட்சத்து 26 ஆயிரம் போலீசார் பணியில் உள்ளனர். அவர்களில் 56 ஆயிரத்து 944 பேர் 29 மாநிலங்கள் மற்றும் 6 யூனியன் பிரதேசங்களில் உள்ள 20 ஆயிரத்து 822 வி.ஐ.பி.க்கள் (முக்கிய பிரமுகர்கள்) பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது ஒரு வி.ஐ.பி.க்கு 3 போலீசார் பாதுகாப்பு என்ற விகித அடிப்படையில் உள்ளது. இதில் லட்சத்தீவுகள் மட்டும் விதிவிலக்காகும். இங்கு வி.ஐ.பி. எவருக்கும் போலீஸ் பாதுகாப்பு கிடையாது. ஏனெனில் அவர்களே தங்களுக்கு பாதுகாப்பு வேண்டாம் என தெரிவித்து விட்டனர்.

அதே நேரத்தில் நாட்டில் வாழும் சாதாரண குடிமகனின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது. பொதுமக்கள் 663 பேருக்கு ஒரு போலீஸ் என்ற விகிதத்தில் மட்டுமே பாதுகாப்பு ஏற்பாடு உள்ளது. மக்கள் தொகையில் 1 லட்சம் பேருக்கு 192 போலீசார் என்ற விகிதாச்சாரத்தில் போலீஸ் பாதுகாப்பு உள்ளது.

தென்னிந்தியாவை விட வட இந்தியாவில்தான் வி.ஐ.பி.க்களுக்கான போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டுள்ளது. அதில் பீகார் முதலிடம் வகிக்கிறது. அங்கு வி.ஐ.பி.க்கள் பட்டிய லில் 3200 பேர் உள்ளனர். அவர்களுக்கு 6368 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் 2207 வி.ஐ.பி.க்களுக்கு 4233 போலீசாரும், ஜம்மு காஷ்மீரில் 2075 வி.ஐ.பி.க்களுக்கு 4499 போலீசாரும், உத்தர பிரதேசத்தில் 1901 வி.ஐ.பி.க் களுக்கு 4,681 போலீசாரும், பஞ்சாபில் 1852 வி.ஐ.பி.க்களுக்கு 5315 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

தென்னிந்தியாவை பொறுத்தவரை வி.ஐ.பி. கலாசாரம் பெரிதளவில் கடைபிடிக்கப்படவில்லை. மிகப் பெரிய மாநிலமான மராட்டியத்தில் 74 வி.ஐ.பி.க் களே உள்ளனர். அவர்களுக்கு 961 போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை மொத்தம் 109 வி.ஐ.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு 228 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

கேரளாவில் 57 வி.ஐ.பி.க்களுக்கு 214 போலீசாரும், கர்நாடகத்தில் 456 வி.ஐ.பி.க்களுக்கு 678 போலீசாரும், ஆந்திர பிரதேசத்தில் 432 வி.ஐ.பி.க்களுக்கு 1973 போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Tags:    

Similar News