செய்திகள்

நீட் தேர்வு: தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும்- மத்திய மந்திரியிடம் நடிகை கவுதமி வலியுறுத்தல்

Published On 2017-09-14 01:38 GMT   |   Update On 2017-09-14 01:38 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து நடிகை கவுதமி வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

டெல்லியில் நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை நடிகை கவுதமி சந்தித்து பேசினார். அப்போது ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பான கோரிக்கை மனு ஒன்றையும் கவுதமி அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீப காலமாக தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடித்தாக வேண்டும். தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு தொடர்பான புரிதல் ஏற்கனவே இருந்தாலும், இன்னும் அதை திடப்படுத்த வேண்டியது அவசியம். எனவே, அதற்கான காலஅவகாசம் கேட்பதற்காக மத்திய மந்திரியை சந்தித்தேன்.

மந்திரி என்னிடம், ‘மனுவில் நீட் தேர்வு விலக்கு பற்றி விரிவாக, விவரமாக கூறி இருக்கிறீர்கள். அதுபற்றி பரிசீலனை செய்து முடிவு எடுக்க 2 வார காலஅவகாசம் வேண்டும்’ என்று கூறினார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருக்கிறேன். முதலில் மத்திய அரசு விலக்கு தரவேண்டும். விலக்கு அளிக்கப்பட்ட காலத்துக்குள் மாநில அரசு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.

அனிதாவை பற்றி பேசவே முடியவில்லை. கவலையாக இருக்கிறது. நான் மாநில அளவில் நுழைவுத்தேர்வு எழுதி என்ஜினீயர் ஆனவள். அதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பதை உணர்ந்துதான் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்கிறேன்.

அடுத்த ஆண்டுதான் விலக்கு கிடைக்கும் என்றாலும் இப்போதே அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். மாநில அரசு கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News