செய்திகள்

நீல திமிங்கல விளையாட்டு: லக்னோ பள்ளிகளில் ஸ்மார்ட் செல்போன்களுக்கு தடை

Published On 2017-09-11 06:22 GMT   |   Update On 2017-09-11 06:22 GMT
நீல திமிங்கலம் விளையாடுவதை தடுக்க லக்னோவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ‘ஸ்மார்ட் செல் போன்கள்’ கொண்டுவர தடை விதித்கப்பட்டுள்ளது.

லக்னோ:

‘ஸ்மார்ட்’ செல்போன்கள் மூலம் ஆன்லைனில் விளையாடப்படும் ‘நீல திமிங்கலம்’ என்ற விளையாட்டு சர்வதேச அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை விளையாடும் சிறுவர், சிறுமிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எனவே, பேஸ்புக், கூகுள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் நீல திமிங்கல விளையாட்டுக்கான இணைப்புகளை துண்டிக்கும்படி தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ‘ஸ்மார்ட் செல் போன்கள்’ கொண்டுவர தடை விதித்கப்பட்டுள்ளது.


அது குறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரி முகேஷ்குமார் சிங் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதில், தங்கள் குழந்தைகள் நீல திமிங்கலம் விளையாடுவதை தடுக்க ‘ஸ்மார்ட் செல்போன்’களை அவர்கள் பள்ளிக்கு எடுத்து செல்ல வராமல் தடுக்க கண்காணிப்பில் ஈடுபடும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களிடம் சோதனை நடத்தி ‘ஸ்மார்ட் செல்போன்’கள் வைத்திருந்தால் பறிமுதல் செய்ய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலதிமிங்கலம் விளையாடி லக்னோ இந்திரா நகரை சேர்ந்த ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News