செய்திகள்

அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர்: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

Published On 2017-08-24 10:20 GMT   |   Update On 2017-08-24 10:21 GMT
ஊழல் வழக்கில் என்னை குற்றவாளியாக காட்டி அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்து விட்டனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பினராயி விஜயன் கம்யூனிஸ்டு கட்சியிலும் ஆட்சியிலும் கடந்த காலங்களில் பல பதவி வகித்தவர்.

1996 முதல் 1998 வரை கேரளாவில் ஈ.கே. நாயனார் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது மந்திரிசபையில் மின்துறை மந்திரியாக பினராயி விஜயன் பதவி வகித்தார்.

அப்போது கனடாவைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு மின்சாரத்துறை தொடர்பாக ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் செய்து அரசுக்கு ரூ.374½ கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பினராயி விஜயன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்திருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.பி.ஐ. கோர்ட்டு ஏற்கனவே வழங்கி இருந்த தீர்ப்பை உறுதி செய்தும், பினராயி விஜயனை விடுவித்தும் நேற்று தீர்ப்பு அளித்தார்.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

என்னை ஒரு குற்றவாளியாக காட்டி அதில் குளிர் காயலாம், அரசியல் ஆதாயம் தேடலாம் என்று சிலர் நினைத்தனர். அவர்கள் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் கேரள ஐகோர்ட்டு வழங்கி உள்ள தீர்ப்பை கேட்டு பலரும் மனம் நொந்து போய் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டை தீர்ப்பு நிலை நாட்டி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News