செய்திகள்

சசிகலா சிறையில் இருந்து வெளியே வரவில்லை: திவாகரனின் மகன் ஜெயானந்த்

Published On 2017-08-22 03:50 GMT   |   Update On 2017-08-22 03:50 GMT
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசி இருவரும் பார்வையாளர்களை சந்திப்பதற்காக தான் வெளியே வந்து உள்ளனர் என்று திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறி உள்ளார்.
பெங்களூரு:

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, இளவரசியுடன் வெளியே சென்றுவிட்டு சிறைக்குள் வருவதுபோன்று புதிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதுபற்றி சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அதுபற்றி அவர் கூறியதாவது:-

“சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு அதாவது இன்று விசாரணைக்கு வருகின்ற நேரத்தில் இதுபோன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இது அவருக்கு எதிரான ஒரு சதி என்றே நினைக்க தோன்றுகிறது.

சிறையில் இருக்கும் ஒருவர் உரிய ‘பரோல்’ அனுமதி இல்லாமல் சாதாரணமாக வெளியே எப்படி வந்து செல்ல முடியும்? இது எப்படி சாத்தியமாகும்?. சிறையின் உள்ளே கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இருந்து அவர்கள் பார்வையாளர்களை சந்திப்பதற்கான இடம் 500 மீட்டர் தூரத்தில் உள்ளது. அப்படி பார்வையாளர்களை சந்திப்பதற்காக தான் சசிகலாவும், இளவரசியும் வந்து உள்ளனர்.



இந்த வீடியோ காட்சிகள் கிராபிக்ஸ் அல்ல. இந்த வீடியோ காட்சிகள் அவர்கள் பார்வையாளர்களை சந்திக்க வரும்போது எடுக்கப்பட்டதா?, அல்லது பார்த்துவிட்டு திரும்பி சென்றபோது எடுக்கப்பட்டதா? என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில் சசிகலா வெளியே எங்கும் சென்று வரவில்லை”.

இவ்வாறு ஜெயானந்த் கூறினார்.

Tags:    

Similar News