செய்திகள்

கொல்கத்தா ஐகோர்ட்டில் முன்னாள் நீதிபதி கர்ணன் பரோல் கேட்டு வழக்கு தொடர முடிவு

Published On 2017-08-21 05:23 GMT   |   Update On 2017-08-21 05:23 GMT
முன்னாள் நீதிபதி கர்ணன் பரோல் கேட்டு மேற்கு வங்காள கவர்னருக்கு அனுப்பிய மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர கர்ணன் முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தா:

தமிழகத்தை சேர்ந்த கர்ணன் கொல்கத்தா ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக இருந்து வந்தார். அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.

மேலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஊழல்வாதிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பினார்.

இது சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பிக்க, அதற்கு பதிலடியாக கர்ணனும் அவர்களுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து கர்ணன் கோர்ட்டு அவமதிப்பு செய்ததாக கூறி அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ். கேகர் தலைமையிலான 7 பேர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.

கடந்த மே மாதம் 9-ந்தேதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் கர்ணன் தலைமறைவாகி விட்டார். மேலும், அவரது பதவி காலமும் முடிந்து ஓய்வு பெற்றார்.

ஒரு மாதத்துக்கு மேலாக தலைமறைவாக இருந்த அவரை கொல்கத்தா போலீசார் தேடிவந்தனர். ஜூன் 20-ந்தேதி கோவையில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரசிடென்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். தற்போது ஜெயிலில் இருந்து வருகிறார்.

அவர் தன்னை பரோலில் அல்லது ஜாமீனில் வெளியே விட வேண்டும் என்று மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கு மனு அனுப்பினார். அரசியல் சாசன சட்டம் ஆர்டிகில் 161-வது பிரிவின் படி இந்த வி‌ஷயத்தில் கவர்னருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது. எனவே அதன் அடிப்படையில் பரோல் அல்லது ஜாமீனில் விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் கவர்னர் இதுவரை இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் இந்த மனுவை மாநில அரசின் முடிவுக்கே அனுப்பி வைத்துள்ளார். மாநில அரசும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர கர்ணன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி கர்ணனின் வக்கீல் மாத்யூநெடும்பரா கூறும்போது, இந்த மாதம் இறுதியில் கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம். கவர்னருக்கு நாங்கள் அனுப்பிய மனு மீது மாநில அரசு உரிய காலகட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று நாங்கள் மனுவில் கேட்க உள்ளோம் என்று கூறினார்.

வழக்கு தொடரப்பட்டால் ஐகோர்ட்டு அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என்று தெரியவில்லை.

Tags:    

Similar News