செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீர்: பொதுமக்களிடம் அத்துமீறல் - தட்டிகேட்ட போலீசாருடன் ராணுவ வீரர்கள் கைகலப்பு

Published On 2017-08-19 09:49 GMT   |   Update On 2017-08-19 09:49 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொதுமக்களிடம் அத்துமீறலாக நடந்த ராணுவ வீரர்கள், இந்த அட்டூழியத்தை தட்டிகேட்ட போலீசாரையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் அமலில் உள்ளது. சந்தேகத்தின்பேரில் யாரை வேண்டுமானாலும் ராணுவத்தினர் வழிமறித்து கேள்வி கேட்கலாம். தேவை ஏற்பட்டால் கைது செய்யலாம். தங்களது உயிருக்கு ஆபத்து நேரும் என்று கருதினால் சுட்டுக் கொல்லலாம் என்பன உள்பட ராணுவத்தினருக்கு இங்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பல ராணுவ வீரர்கள் தவறாக பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை சித்ரவதை செய்துவருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யவும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், குப்வாரா மாவட்டத்துக்குட்பட்ட குப்வாரா நகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் வழியாக சென்ற ஒருவரை வழிமறித்த சில ராணுவ வீரர்கள் அந்நபரை அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தின் வாசலில் நின்றிருந்த சில போலீசார் இந்த அத்துமீறலை தட்டிக்கேட்டு அந்நபரை விடுவிக்க முயன்றனர்.

இதனால், ராணுவ வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் இரு போலீசார் காயமடைந்தனர்.

கடந்த மாதம் 22-ம் தேதி கன்டேர்வால் மாவட்டத்துக்குட்பட்ட சோதனைச்சாவடி அருகே ராணுவத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராணுவ வீரர்கள் கும்பலாக சென்று போலீஸ் நிலையத்தை தாக்கியதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு போலீசார் காயமடைந்தது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News