செய்திகள்

போலி என்கவுண்டரில் சிக்கிய 2 போலீஸ் அதிகாரிகள் பதவி நீட்டிப்பு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-08-18 09:57 GMT   |   Update On 2017-08-18 09:57 GMT
போலி என்கவுண்டரில் சிக்கிய 2 போலீஸ் அதிகாரிகள் பதவி நீட்டிப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

புதுடெல்லி:

குஜராத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆக இருந்தவர் என்.கே.அமின். பதவி ஓய்வுக்கு பிறகு மகிசாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆக அவருக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் தொடர்புடையவர்.

அதே போன்று துணை போலீஸ் சூப்பிரண்டு ஆக இருந்த தருண் பரோத்துக்கும் ஓய்வுக்கு பிறகு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவர் இஸ்ரத் ஜகான் என்கவுண்டர் வழக்கில் சம்பந்தப்பட்டவர். இவருக்கு வதோரா மேற்கு ரெயில்வேயில் மீண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆக இருந்தார்.

இவர்கள் இருவரும் போலி என்கவுண்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என குற்றம் சாட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இவர்கள் குற்ற மற்றவர்கள் என கூறி விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் என்கவுண்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட் என கருதி வெகுமதியாக ஓய்வுக்கு பின் அவர்கள் இருவருக்கும் குஜராத் அரசு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது.

அதை எதிர்த்து முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா குஜராத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கேகர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இவர்கள் 2 பேரின் பதவி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்யும்படி குஜராத் போலீஸ் டி.ஜி.பி. பாண்டேவுக்கு உத்தரவிட்டது.

Tags:    

Similar News