செய்திகள்

டெல்லி ஐகோர்ட்டில் நீல திமிங்கல விளையாட்டுக்கு எதிராக வழக்கு - இன்று விசாரணை

Published On 2017-08-16 20:19 GMT   |   Update On 2017-08-16 20:19 GMT
புளூ வேல் விளையாட்டு தொடர்பான இணைப்புகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உடனே நீக்குமாறு டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது
புதுடெல்லி:

உலகம் முழுவதும் உள்ள இளம் வயதினரிடம் புளூ வேல் (நீல திமிங்கலம்) எனப்படும் இணையதள விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டின் இறுதி சவால், தற்கொலைக்கு இட்டுச் செல்வதால் இதில் கலந்து கொண்ட ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த விளையாட்டு சவால்களில் ஈடுபட்ட சுமார் 6 சிறுவர்கள் கடந்த 2 வாரங்களில் உயிரிழந்துள்ளனர்.



எனவே இந்த விளையாட்டுக்கு மத்திய அரசு நேற்றுமுன்தினம் தடை விதித்தது. இது தொடர்பான இணைப்புகளை உடனே நீக்குமாறு கூகுள், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புளூ வேல் விளையாட்டு தொடர்பான இணைப்புகள் (லிங்க்) உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உடனே நீக்குமாறு கூகுள், பேஸ்புக் மற்றும் யாகூ போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் குர்மீத் சிங் என்ற வக்கீல் நேற்று பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இவ்வாறு போடப்படும் உத்தரவை இணைதள நிறுவனங்கள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை உருவாக்குமாறு டெல்லி போலீசுக்கு உத்தரவிடுமாறும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். பொறுப்பு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதிகள் ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
Tags:    

Similar News