செய்திகள்

பீகார் பா.ஜ.க. துணை முதல்-மந்திரி கார் மீது கல்வீச்சு: லல்லு கட்சி மீது புகார்

Published On 2017-08-16 06:49 GMT   |   Update On 2017-08-16 06:49 GMT
பீகார் பா.ஜ.க. துணை முதல்-மந்திரி வைசாலி நகரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது அவரது கார் மீது நடந்த தாக்குதலுக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாட்னா:

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில் முதல்- மந்திரி நிதிஷ்குமார் இந்த கூட்டணியில் இருந்து விலகினார்.

பின்னர் அவர் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார். பாரதிய ஜனதா மாநில தலைவர் சுசில்குமார் மோடிக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு பிறகு நிதிஷ்குமார் கட்சியினருக்கும், லல்லு கட்சியினருக்கும் இடையே ஆங்காங்கே மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் துணை முதல்-மந்திரி சுசில்குமார் மோடி வைசாலி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்றார்.

அதே பகுதியில் லல்லு மகன் தேஜஸ்வி யாதவின் நிகழ்ச்சியும் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக லல்லு கட்சி தொண்டர்கள் திரண்டு இருந்தனர். தேஜஸ்வி யாதவ் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு புறப்பட்டு சென்றார்.

இதில் பங்கேற்ற தொண்டர்கள் சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு இருந்தனர். அப்போது துணை முதல்- மந்திரி சுசில்குமார் மோடியின் கார் அந்த வழியாக வந்தது.

இதை பார்த்ததும் லல்லு கட்சியின் தொண்டர்கள் ஆவேசம் அடைந்து சுசில்குமாருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்களில் சிலர் சுசில்குமார் மோடி கார் மீது கல்வீசி தாக்கினார்கள். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். கல்வீச்சில் சுசில்குமார் மோடிக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இது சம்பந்தமாக சுசில்குமார் மோடி கூறியதாவது:-

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியினரால் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. லல்லு பிரசாத்தின் பினாமி சொத்து விவரங்களை நான் வெளியிட்டு வருவதால் என் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல் மூலம் என்னை தடுத்து நிறுத்தி விட முடியாது. தொடர்ந்து நான் இது போன்ற ஊழல் வி‌ஷயங்களை வெளி கொண்டு வருவிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுசில்குமார் மோடி கார் மீது நடந்த தாக்குதலுக்கு ஐக்கிய ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நிரஜ்குமார் கூறும் போது, துணை முதல்-மந்திரி கார் மீது நடந்த தாக்குதலை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய பாதுகாப்பு அளிக்காத போலீசார் மீதும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News