செய்திகள்

அசாம்: மழை, வெள்ளத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலி - உரிய உதவிகளை செய்வதாக பிரதமர் உறுதி

Published On 2017-08-14 10:22 GMT   |   Update On 2017-08-14 10:22 GMT
அசாம் மாநிலத்தை துவம்சம் செய்துள்ள மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய உதவிகளை செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இங்குள்ள 21 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படுகிறது. பல லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் அழிந்துள்ளன.

பல்லாயிரக்கணக்கான வீடுகள், கடைகள் சேதம் அடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி மழை, வெள்ளம் சார்ந்த விபத்துகளில் 150-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தை நாட்டின் பிறபகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பாழடைந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் நிவாரண படையை சேர்ந்த வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



அசாம் முதல் மந்திரி சர்பானந்த் சோனோவால் பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த சேதங்கள் தொடர்பாக விளக்கினார்.

இதுதொடர்பாக, பிரதமரின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அசாம் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, நிலைமைகளை மத்திய அரசுக்கு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து அசாம் மாநிலம் விடுபட தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News