செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல்: துப்பாக்கி சண்டையில் தமிழக வீரர் பலி

Published On 2017-08-13 11:25 GMT   |   Update On 2017-08-13 11:25 GMT
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை பாதுகாப்பு படையினர் வேட்டையாடினார்கள். இதனால் தினமும் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. நேற்று பாதுகாப்பு படையினர் ஷோபியான் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கைனாபோரா பகுதியில் அவ்னிரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர்.

அவர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் சுட்டத்தில் ராணுவ தரப்பில் 5 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதையடுத்து அந்தப் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்தவர்கள். சுதந்திரதின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் இவர்கள் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

துப்பாக்கி சண்டையில் பலியான 2 வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்றும் பெயர் இளையராஜா என்றும் ராணுவதரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.

இதற்கிடையே ஸ்ரீநகர் தால்கேட் பகுதியில் பத்யாரி சவுக் என்ற இடத்தில் போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அந்தப் பகுதியில் வசிக்கும் இம்தியாஸ் அகமதுமிர் என்பவர் பலத்த தீக்காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
Tags:    

Similar News