செய்திகள்

சுதந்திர தின விழாவில் மாணவரிடையே மோடியை மகிமைப்படுத்துவதா? - மேற்கு வங்காளம் எதிர்ப்பு

Published On 2017-08-13 10:44 GMT   |   Update On 2017-08-13 10:44 GMT
சுதந்திர தின விழாவில் மாணவரிடையே பிரதமர் மோடியை மகிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு, மேற்கு வங்காள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி சமீபத்தில் ’புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என அறிவித்திருந்தார். இதற்கிடையே, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில், புதிய இந்தியாவை உருவாக்கும் பிரதமர் மோடியின் கருத்தை, மாணவர்களிடையே  கொண்டு சேர்க்கும் வகையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

பள்ளிகளில் இந்தாண்டு நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் மாணவர்களிடையே நாட்டுப்பற்றை ஊட்டும் வகையிலும், பிரதமர் மோடியின் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்னும் சபதத்தை பதியவைக்கும் வகையிலும், மகிமைப்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு மேற்கு வங்காளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ’’மாணவர்களிடையே சுதந்திர போராட்டம் குறித்த தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளவே இதுபோன்ற போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், மேற்கு வங்காளத்தை ஆட்சி செய்யும் திரிணாமுல் காங்கிரஸ் தனது மாநிலத்தில் மத்திய அரசின் முடிவை அமல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது எதிர்பாராதது. நாங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு மதசார்பில்லாதது. அரசியல் ரீதியானது அல்ல. இதுகுறித்து அவர்களிடம் பேசவுள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News