செய்திகள்

கொல்கத்தா: பிரபல நீச்சல் குளத்தில் இருந்து பயிற்சியாளர் உடல் மீட்பு

Published On 2017-08-12 11:21 GMT   |   Update On 2017-08-12 11:21 GMT
கொல்கத்தாவில் உள்ள பிரபல நீச்சல் குளத்தில் காணாமல் போன பயிற்சியாளரின் உடலை நீரின் அடியில் இருந்து பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் மீட்டனர்.
கொல்கத்தா:

கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கத்தில் உள்ள பிரபல நீச்சல் குளத்தில் சுங்கத் துறை முன்னாள் ஊழியரான கஜால் டுட்டா நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் நேற்று காலை நீச்சல் பயிற்சி செய்யும் போது காணாமல் போனதாக வந்த தகவலின் அடிப்படையில் தேடும் பணியில் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஈடுபட்டனர். 20 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின் அவரது உடலை மீட்டனர்.

இந்த நீச்சல் குளம் 100 ஆண்டு பழமையானது. ஒலிம்பிக் மற்றும் பல தேசிய நீச்சல் வீராங்கனைகள் இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி செய்துள்ளனர். இத்தகைய புகழ் கொண்ட நீச்சல் குளத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் குளத்தில் மூங்கில் கம்புகள் போடப்பட்டிருந்தன. நீச்சல் பயிற்சி மேற்கொண்ட கஜால் அந்த மூங்கில் கம்புகளில் சிக்கி மேலே வரமுடியாமல் மூச்சு திணறி இறந்துள்ளார். குளத்தில் உள்ள நீரை வெளியேற்றிய பின்னரே அவரது உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.

கஜால் டுட்டா பல ஒலிம்பிக் மற்றும் தேசிய நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்தவர். மேலும் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயின்று சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News