செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ‘கணக்கு பாடம் படி’ என்றதால் தந்தையை சுட்டுக்கொன்ற மகன்

Published On 2017-08-08 10:51 GMT   |   Update On 2017-08-08 10:52 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் கணக்கு பாடம் படி என்றதால் தந்தையை மகன் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத்:

உத்தரபிரதேச மாநிலம் துமன்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் மோதிலால் பால்.

இவர் பதோதி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

மோதிலாலின் மகன் ராஜா பால் என்ற பிரின்ஸ். 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அவனை என்ஜீனியராக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாகும். எனவே ஊருக்கு வரும்போதெல்லாம் அவர் கணக்கு பாடத்தில் கவனம் செலுத்தும்படி மகனிடம் அறிவுரை சொல்வது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை மோதிலால் ஊருக்கு வந்திருந்த போது மகன் பிரின்ஸ் கணக்கு பாடத்தில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்திருப்பதை அறிந்தார். கடும் கோபம் அடைந்த அவர் மகனை அடித்தார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அன்றிரவு மோதிலால் வீட்டில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரின்ஸ் துப்பாக்கியால் தன் தந்தை தலை மீது குறி பார்த்து சுட்டார். இதில் மோதிலால் தலை சிதறி உயிரிழந்தார்.

சத்தம் கேட்டு பிரின்ஸின் தாயும் சகோதரியும் ஓடி வந்தனர். அவர்களை பிரின்ஸ் துப்பாக்கி முனையில் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டார். சுமார் 30 மணி நேரம் அவர்களை பிணைக் கைதியாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் உறவினர் ஒருவர் மோதிலால் வீட்டுக்கு சென்ற போது உண்மை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசார் வந்து பிரின்ஸை கைது செய்தனர்.

சுமார் 30 மணி நேரமாக கொலை மறைக்கப்பட்டுள்ளதால் மோதிலாலின் மனைவி மகள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News