செய்திகள்

தீவிரவாத எதிர்ப்பு படையின் அதிகாரியாக நடித்து ரூ. 9 லட்சம் சுருட்டிய பெண் கைது

Published On 2017-08-02 08:12 GMT   |   Update On 2017-08-02 08:12 GMT
மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த அதிகாரி என நாடகமாடி பொதுமக்களிடமிருந்து 9 லட்சம் ரூபாய் சுருட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மராட்டிய மாநில தலைநகர் மும்பைக்குட்பட்ட பால்கர் பகுதியில் போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதைதொடர்ந்து அவரை பால்கர் போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் மான்சி திலிப் மேத்தா என்பதும், தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரியாக நடித்து பணம் சுருட்டியதும் தெரிய வந்தது.

விசாரணையில் மான்சி கூறுகையில், ’தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கண்காணித்து வந்தேன். அவர்களிடம், நான் தீவிரவாத எதிர்ப்பு படைப்பிரிவில் அதிகாரியாக உள்ளதாக கூறி வந்தேன். எனது திடமான உடல்வாகு அவர்கள் அனைவரையும் நான் சொன்னதை நம்பவைத்தது.

அவர்களின் தவறான செயல்பாடுகள் பற்றி போலீசில் சொல்லாமல் இருக்க எனக்கு பணம் தரவேண்டும் என மிரட்டினேன். இதுவரை பொதுமக்களிடம் இருந்து சுமார் 9 லட்சம் ரூபாய் பெற்றுள்ளேன். எதிர்பாராத விதமாக இன்று போலீசில் சிக்கிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து மான்சி திலிப் மேத்தா மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக பால்கர் போலீசார் கூறுகையில், ’’மான்சி திலிப் மேத்தா யாரிடம் எவ்வளவு ரூபாய் வாங்கியுள்ளார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதுகுறித்து தகவல்களை அவர் இன்னும் சொல்லவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் முழு விவரமும் தெரியவரும்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்பு படையை சேர்ந்த அதிகாரியாக நடித்து பொதுமக்களிடம் பணம் சுருட்டிய பெண்மணி சிக்கியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News