செய்திகள்

விமான பயணச்சீட்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயமா? - உள்துறை அமைச்சகம் தகவல்

Published On 2017-07-28 10:13 GMT   |   Update On 2017-07-28 10:14 GMT
விமான பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்வதற்கோ அல்லது பெறுவதற்கோ ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டமில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உலகில் மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை அத்தியாவசியமோ, அப்படி இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் 
அட்டை அத்தியாவசியம். எரிவாயு, உரம் உள்ளிட்ட அரசின் மானியத்தொகையை பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக பயன்படுத்தும் 
ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் காட்டு கத்தல் கத்தினாலும், காதில் போட்டுக்கொள்ளாத மத்திய அரசு அடுத்து எதில் ஆதாரை புகுத்தலாம் என மேலும், மேலும் யோசித்து வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழு நேற்று கூடியது.

உள்துறை செயலாளர் ராஜிவ் குப்தா தலைமையில் கூடிய இந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆதார் தகவல்களின் பாதுகாப்பு தொடர்பாக சில விளக்கங்கள் அளிக்கப்பட்டது. ஆதார் அட்டைகளின் தகவல்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், அது குறித்தான தகவல்கள் வெறும் வதந்திகள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், விமான பயணசீட்டுகள் பெறுவதற்கும், முன்பதிவு செய்வதற்கும் ஆதார் எண் அவசியமாக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆதார் அட்டை பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News