செய்திகள்

டி.டி.வி.தினகரனின் மாமியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு ‘பரோல்’ மறுப்பு

Published On 2017-07-28 03:31 GMT   |   Update On 2017-07-28 03:31 GMT
டி.டி.வி. தினகரனின் மாமியார் நேற்று காலமானார். அவருடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சசிகலாவுக்கு ‘பரோல்’ மறுக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அ.தி.மு.க(அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சமாக கைமாறியுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா அறிக்கை தாக்கல் செய்தார்.

இந்த சம்பவம் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க(அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் மாமியாரும், சசிகலாவின் அண்ணியுமான எஸ்.சந்தானலட்சுமி(வயது 69) மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று(வெள்ளிக்கிழமை) தஞ்சாவூரில் நடக்கிறது.

இதில், கலந்து கொள்வதற்காக 5 நாட்கள் ‘பரோல்’ கேட்டு நேற்று சசிகலா சிறை சூப்பிரண்டுவிடம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவை அதிகாரி பரிசீலனை செய்து சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இறந்தவர் சசிகலாவின் ரத்த சொந்தம் இல்லை எனக்கூறி அவருக்கு ‘பரோல்’ மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News