செய்திகள்

பயணிக்கு வழங்கிய உணவில் பல்லி: கேட்டரிங் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்திய ரெயில்வே

Published On 2017-07-26 15:24 GMT   |   Update On 2017-07-26 15:24 GMT
ரெயிலில் பயணிக்கு வழங்கிய உணவில் பல்லி இறந்து கிடந்தது தொடர்பாக கேட்டரிங் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
புதுடெல்லி:

ஹவுராவில் இருந்து டெல்லி நோக்கி வந்த ரெயிலில் பயணம் செய்த ஒரு பயணி, பீகார் மாநிலம் ஜாஜா அருகே சென்றபோது ரெயில்வே கேண்டீனில் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அந்த பிரியாணியில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. பல்லி கிடந்ததை கவனிக்காமல் சாப்பிட்டதால் அந்த பயணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து அவருடன் பயணம் செய்த மற்றொரு பயணியான மேக்னா சின்கா நேற்று ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு டுவிட்டர் மூலம் கொண்டு சென்றார். பிரியாணியில் பல்லி கிடந்ததை தனது செல்போனில் படம் எடுத்து அதை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து, இந்திய ரெயில்வேக்கு டேக் செய்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவை, ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரவுக்கு டேக் செய்துள்ளார்.

இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய ரெயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இத்தகவலை ரெயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் சக்சேனா தெரிவித்துள்ளார். இதேபோன்று பல்வேறு புகார்கள் காரணமாக கடந்த 6 மாதங்களில் 8 கேட்டரிங் நிறுவனங்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ரெயில்வே வழங்கும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) குற்றம் சாட்டிய சில நாட்களில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News