செய்திகள்

துணை ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும்: பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு மோடி எச்சரிக்கை

Published On 2017-07-26 05:04 GMT   |   Update On 2017-07-26 05:05 GMT
துணை ஜனாதிபதி தேர்தலில் சரியாக வாக்களிக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 20-ந்தேதி எண்ணப்பட்டபோது 71 எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் செல்லாத ஓட்டு போட்டு இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாக பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓட்டு சதவீதம் குறைந்து போனது. இது பிரதமர் மோடியிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற இரு அவை பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டு கூட்டம் நடந்தது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எம்.பி.க்களுக்கு எச்சரிக்கை விடுத்து பேசினார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் 21 எம்.பி.க்கள் செல்லாத வாக்குகள் போட்டுள்ளனர். எப்படி வாக்களிக்க வேண்டும் என்று பல தடவை பயிற்சி எடுத்த பிறகும் எம்.பி.க்கள் செல்லாத ஓட்டு போட்டு இருப்பது மிகவும் வெட்ககரமானது. இனி இத்தகைய நிலை ஏற்பட கூடாது.

துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு 5-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அப்போது பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களது வாக்குகளை மிகச் சரியாக பதிவு செய்ய வேண்டும்.

துணை ஜனாதிபதி தேர்தலின்போது ஒவ்வொரு எம்.பி.யும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். ஓட்டு போடும் முன்பு ஒரு தடவைக்கு மற்றொரு தடவை சரி பார்த்து உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

பாராளுமன்ற மேல்-சபையில் கடந்த வெள்ளிக்கிழமை பெரும்பாலான எம்.பி.க்கள் வரவில்லை. நீங்கள் ஒவ்வொரு வரும் கண்டிப்பாக சபைக்கு தவறாமல் வர வேண்டும்.



நீங்கள் சபைக்கு வருகிறீர்களா என்பதை நான் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் செயல்பாடுகளும் எனக்குத் தெரியும். எனவே நீங்கள் தொகுதி மேம்பாட்டு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Tags:    

Similar News