செய்திகள்

கிலானி மருமகன் உள்ளிட்ட 7 பேருக்கு என்.ஐ.ஏ. காவல்: 10 நாட்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி

Published On 2017-07-25 15:05 GMT   |   Update On 2017-07-25 15:05 GMT
ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்க தலைவர் கிலானியின் மருமகன் உள்ளிட்ட 7 பேரை என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத இயக்கங்களிடம் இருந்து பணம் வருவதாக தகவல்கள் வெளியானது. காஷ்மீரில் அமைதியின்மை ஏற்பட்டபோது பிரிவினைவாதிகள் பயங்கரவாதிகளிடம் பெற்ற பணத்தை கல்வீச்சாளர்களுக்கு வழங்கியதாகவும், இளைஞர்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதுதொடர்பான விசாரணையைத் தொடங்கிய தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ), கடந்த மாதம் பிரிவினைவாத இயக்க தலைவர்களின் வீடுகளில் சோதனை செய்தது. இந்த சோதனையில், ரூ.2 கோடி பணம், லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களிடன் கடித நகல்கள் மற்றும் பல முக்கிய தகவல்கள் சிக்கின.

அத்துடன் பிரிவினைவாத இயக்க தலைவர் கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா உள்ளிட்ட தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் கிலானியின் மருமகன் அல்டாப் அகமது ஷா, தெஹ்ரீக்-இ-ஹரியத் செய்தித் தொடர்பாளர் அயாஸ் அக்பர், பீர் சபியுல்லா, மிர்வாய்ஸ் உமர் பாரூக் தலைமையிலான ஹரியத் மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாகித் அல் இஸ்லாம், மெஹ்ரஜுதின் கல்வாபல், நயீம் கான் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட 7 பேரும் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை 18 நாட்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். அவர்களை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று என்ஐஏ வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், ஏற்கனவே என்ஐஏ விசாரணை நடத்தி விட்டதால் காவலில் அனுப்பக் கூடாது என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வழக்கறிஞர் வாதிட்டார்.

இதுதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி பூனம் ஏ பம்பா, கைது செய்யப்பட்ட 7 பேரையும் 10 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News