செய்திகள்

அந்தரங்க உரிமை பற்றிய பிரச்சினை: ஆதார் வழக்கில் மத்திய அரசு 25-ந் தேதி வாதம் - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

Published On 2017-07-20 19:44 GMT   |   Update On 2017-07-20 19:44 GMT
ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தில், தனி மனிதர்களின் அந்தரங்க உரிமை மீறப்படுவதாக தாக்கல் செய்த வழக்கின் மீதான மத்திய அரசின் வாதத்தை 25-ந் தேதி கேட்போம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
புதுடெல்லி:

ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தில், தனி மனிதர்களின் அந்தரங்க உரிமை மீறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை தொடுத்துள்ளனர். அந்த வகையில், ஒருவரது அந்தரங்க உரிமை என்பது அடிப்படை உரிமையா என்பதை நிர்ணயிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில், நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர் ஆகியோரை கொண்ட 9 பேர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில், வழக்குதாரர்கள், எதிர் வழக்குதாரர்கள் என பல தரப்பினரின் வாதங்களையும் நீதிபதிகள் நேற்று கேட்டு முடித்தனர்.

இதையடுத்து, மத்திய அரசின் வாதத்தை 25-ந் தேதி கேட்போம் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் தனது தீர்ப்பை அளிக்கும்.

அதே நேரத்தில், ஆதார் அட்டைக்கு எதிரான பிற விவகாரங்களை, 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டின் 9 நீதிபதிகள் அமர்வு திரும்ப அனுப்பி வைக்கும் என தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது. 
Tags:    

Similar News