செய்திகள்

ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு: குஜராத்தில் ஜவுளி வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Published On 2017-07-10 11:05 GMT   |   Update On 2017-07-10 11:05 GMT
குஜராத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அகமதாபாத்:

இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜவுளி உற்பத்தியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இங்கிருந்து இந்தியா முழுவதும் ஜவுளிகளையும், ஆயத்த ஆடைகளையும் அனுப்பி வருகிறார்கள்.

இதற்காக அகமதாபாத்திலும், சூரத் நகரிலும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த வர்த்தக நிறுவனங்கள் அங்கு அதிக அளவில் உள்ளன.

ஜவுளி தொழிலுக்கு தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரியால் ஜவுளி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இன்று முதல் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறார்கள். சூரத் நகரில் ஏற்கனவே வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்டார்கள். அவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

குஜராத் வேலை நிறுத்தம் காரணமாக அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ஜவுளிகள் செல்வது முற்றிலும் நின்றுவிடும். இதனால் இந்தியா முழுவதுமே பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா கூறும்போது, ஜவுளி வியாபாரிகளின் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். அடுத்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும். எனவே வேலை நிறுத்ததை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் பட்டம் தயாரிக்கும் தொழிலும் பெரிய அளவில் நடந்து வருகிறது. தற்போது பட்டத்திற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. குடிசை தொழிலாக நடைபெறும் இதற்கும் வரி விதித்திருப்பதால் பட்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். அவர் கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரி திட்டத்துக்கு அவரது மாநிலத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News