செய்திகள்

அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2017-06-29 03:13 GMT   |   Update On 2017-06-29 03:13 GMT
அலவன்ஸ் தொடர்பான 7 ஆவது ஊதியக்குழுவின் 34 திருத்தங்கள் கொண்ட பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

7-வது ஊதியக்குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையில் உயர் நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது. 

இக்குழுவானது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் எவ்வளவு தொகை அளிக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு அறிக்கையை சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றியமைக்கும் 7-வது ஊதியக் குழுவின் அலவன்ஸ் தொடர்பான 34 திருத்தங்கள் கொண்ட பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

வீட்டு அலவன்ஸ், மருத்துவ அலவன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைக்காக ஊதிய உயர்வு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாற்றி அமைக்கப்பட்டுள்ள வீட்டு அலவன்ஸ் மூலம் 7.5 லட்சம் மத்திய அரசின் ஊழியர்கள் பயன் அடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.30,748.23 கோடி கூடுதல் நிதி செலவிட வேண்டி இருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத ஊதிய உயர்வு வழங்கும்படி 7-வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து ஜூலை ஒன்றாம் தேதி முதல் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News