செய்திகள்
கைது செய்யப்பட்ட 3 பேரை படத்தில் காணலாம்.

சபரிமலை புதிய கொடி மரத்தில் திராவகத்தை ஊற்றி சேதப்படுத்திய 3 பேர் கைது

Published On 2017-06-26 03:47 GMT   |   Update On 2017-06-26 03:47 GMT
சபரிமலை புதிய கொடிமரத்தில் திராவகத்தை ஊற்றி சேதப்படுத்தியது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சபரிமலை:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ரூ.3.20 கோடி செலவில் புதிய கொடி மரம் நிறுவப்பட்டு உள்ளது. இதற்கான பிரதிஷ்டை விழா நேற்று நடைபெற்றது. பகல் 11.50-1.40 க்கு இடையேயான சுப முகூர்த்தத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு புதிய கொடி மரத்தை புனித நீர் தெளித்து பிரதிஷ்டை செய்து வைத்தார்.



இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18-ம் படி ஏறிய உடன் கொடி மரத்தை தொட்டு வணங்குவது வழக்கம். இந்த நிலையில் புதிய கொடி மர பிரதிஷ்டை நடைபெற்றதை யொட்டி பலர் நவதானியங்கள் சேர்த்த புனித நீரை ஊற்றி வழிபட்டனர். இதனிடையே பிரதிஷ்டை பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில் பிற்பகல் 2 மணியளவில் பஞ்சவர்க தரை பகுதியில் பதிக்கப்பட்ட தங்க தகடுகள் வெண்மை நிறத்தில் மாற தொடங்கியது.

இதை கண்ட தேவஸ்தான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தை தொடர்ந்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், கொடிமரத்தை சுற்றி நடந்த சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ படங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 3 பேர் பஞ்சவர்க தரை பகுதியில் தாங்கள் கொண்டு வந்த நீர் போன்ற ஒரு திராவகத்தை ஊற்றுவது தெளிவாக தெரிந்தது. இந்த 3 பேரையும் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். சபரிமலை, பம்பை உள்பட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களின் புகைப்படங்களை வைத்து அவசர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் பம்பை பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டு இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பாதரசம் வைக்கப்பட்டு இருந்த பாட்டிலும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவில் ஆசாரத்தின் படி, வேண்டுதலின் அடிப்படையில் நவதானியங்களுடன் சேர்த்து திராவகத்தை (பாதரச கலவை) ஊற்றியதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் இதனை நம்பவில்லை. கைது செய்யப்பட்ட 3 பேரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் குறித்து கேரள தேவஸ்தான துறை மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:-

புதிய கொடி மரத்தில் திராவகம் ஊற்றி சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சதி செயலில் யார் யார் ஈடுபட்டு உள்ளனர் அவர்களின் நோக்கம் என்ன என்பதை விரைவில் கண்டறிய வேண்டும். விரைவில் கொடிமரத்தில் வெண்மையான பகுதிகள் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News