செய்திகள்

பயிர்க் கடன் தள்ளுபடி: மராட்டிய அரசின் அறிவிப்பை ஏற்க விவசாயிகள் மறுப்பு

Published On 2017-06-25 15:44 GMT   |   Update On 2017-06-25 15:44 GMT
மராட்டிய மாநில விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசின் அறிவிப்பை விவசாய சங்கத்தினர் ஏற்க மறுத்துள்ளனர்.
மும்பை:

மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது.

மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற தற்கொலைகளை தடுக்கவும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்குள்ள விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன் விளைவாக, விவசாயிகளின் பயிர்க் கடன் தொகையில் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கான கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பயிர் கடன்கள் தள்ளுபடியாகும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தை ஏற்க முடியாது என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், ’’அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும். ஆனால் வங்கியில் அதற்குமேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இதனால் எந்த பலனும் இல்லை. எனவே இந்த திட்டத்தை எங்களால் ஏற்கமுடியாது.

இதுதொடர்பாக ஜூலை 9-ம்தேதி நாசிக்கில் நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அதைதொடர்ந்து, மாநில அரசை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்த உள்ளோம்.
 
எங்களின் கோரிக்கையை ஏற்காவிட்டால், ஜூலை 26-ம்தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்’’ என தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News