செய்திகள்

இந்தூர் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் துண்டிப்பால் 17 நோயாளிகள் பலி

Published On 2017-06-23 07:20 GMT   |   Update On 2017-06-23 07:20 GMT
இந்தூர் ஆஸ்பத்திரியில் ஆக்ஸிஜன் துண்டிப்பால் 17 நோயாளிகள் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 1400 படுக்கைகள் உள்ளன. இங்கு ஏராளமான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதில் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களில் இருந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாலையில் திடீர் என்று ஆக்ஸிஜன் செல்வது துண்டிக்கப்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 17 நோயாளிகள் இறந்தனர்.

உடனே மருத்துவ அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்தனர். 15 நிமிடம் ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டு இருப்பதையும், அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் இந்த துண்டிப்பு நடந்து இருப்பதையும் கண்டு பிடித்தனர்.



ஆக்ஸிஜன் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஆஸ்பத்திரி தலைவர் துபேய் கூறுகையில், ஆக்ஸிஜன் துண்டிக்கப்பட்டது. தற்செயலாக நடந்தது. இதில் மர்மமோ சதி செயலோ இல்லை என்றாலும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

1400 நோயாளிகள் சிகிச்சை பெறும் இங்கு தினமும் 10 அல்லது 20 பேர் சிகிச்சை பலனின்றி இறக்க நேரிடுகிறது. அது போல் தான் இதுவும் எனவே இதில் சதி எதுவும் இல்லை என்றார்.
Tags:    

Similar News