செய்திகள்

இரு பத்திரிகையாளர்களுக்கு ஓராண்டு சிறை: கர்நாடக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Published On 2017-06-22 13:56 GMT   |   Update On 2017-06-22 13:56 GMT
எம்.எல்.ஏக்களை பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து கர்நாடக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெங்களூர்:

கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளிவரும் ‘ஹை பெங்களூர்’ மற்றும் ‘யெலஹன்கா வாய்ஸ்’ என்ற இரு பத்திரிகைகளில் கடந்த 2014-ம் ஆண்டில் சட்டசபை உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டும் வகையில் அவதூறு கட்டுரை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து கோலிவாட் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சபாநாயகர் ஓழுங்கு நடவடிக்கைக்குழுவிற்கு பரிந்துரை செய்தார்.

சபாநாயகர் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கர்நாடக சட்டசபை நேற்று கூடியது. அப்போது சபாநாயகர், பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். அந்த தீர்மானத்தில், ‘‘அவதூறாக கட்டுரை வெளியிட்ட இரு பத்திரிகை ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும். மேலும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட வேண்டும். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்’’ என  கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டசபை செயலாளர் மூர்த்தி கூறுகையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை மாநில போலீசாரிடம் அளிக்க உள்ளோம். அவர்கள் பத்திரிகை ஆசிரியர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News