செய்திகள்

சத்தீஸ்கர்: தலைக்கு ரூ. 3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சலைட் கைது

Published On 2017-06-21 11:26 GMT   |   Update On 2017-06-21 11:26 GMT
சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ.3 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் கமாண்டரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் அவாபள்ளி பகுதியின் புன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ் சோதி(20). நக்சல் அமைப்பின் கொரில்லா படையை சேர்ந்த துணை கமாண்டராக இருந்து வருகிறார்.

இவருக்கு நக்சலைட் அமைப்பு தொடர்பான 2 வழக்குகளில் தொடர்பு இருப்பதால், இவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். மேலும், இவரது தலைக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 229-வது பட்டாலியன் பிரிவினரும், மாநில போலீசாரும் இணைந்து கோட்டாகுடா மற்றும் கன்வர்குடா கிராமங்களை இணைக்கும் சாலையில் இன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வந்த நபர் போலீசாரை கண்டு பயந்து ஓடினார். அவரை விரட்டி பிடித்த பாதுகாப்பு படையினர் அவரிடம் இருந்து டிபன்பாக்ஸ் குண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் வயர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர் நக்சலைட் கமாண்டர் ராகேஷ் சோதி என்பதும், அவரது தலைக்கு 3 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News