செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் குறுகிய கால பயிர்க்கடன்: மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு

Published On 2017-06-14 20:35 GMT   |   Update On 2017-06-14 20:35 GMT
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன் வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது வட்டி மானியத்துடன் கூடியது.
புதுடெல்லி:

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன் வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது வட்டி மானியத்துடன் கூடியது.

பருவமழை பொய்த்துப்போய், பயிர்கள் கருகியதால் தமிழ்நாடு, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் நிலைமை, சொல்ல முடியாத நிலையில் உள்ளது.

அதனால் அவர்கள் தாங்கள் வங்கிகளிடம் பெற்ற பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசம், மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் விவசாயிகளின் வேதனையை சற்று தணிக்கிற விதத்தில், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் கூடிய குறுகிய கால பயிர்க்கடன் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கடன் நடப்பு 2017-18 நிதி ஆண்டுக்கு உரியதாகும்.

இதன்படி விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையில் குறுகிய கால பயிர்க்கடன்கள் வழங்கப்படும். ஒரு வருடத்தில் முறையாக திருப்பி செலுத்துவோருக்கு இந்த கடனுக்கான வட்டி 4 சதவீதம்தான்.

விவசாயிகளுக்காக 5 சதவீத வட்டி மானியத்தை பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகளுக்கு அரசே வழங்கும்.

இந்த கடன் திட்டத்தை நபார்டு வங்கியும், பாரத ரிசர்வ் வங்கியும் இணைந்து செயல்படுத்தும்.

இந்த கடன் வழங்குவதின் நோக்கம், அடிமட்ட அளவில், குறுகிய கால பயிர்க்கடன்கள் விவசாயிகளுக்கு குறைவான வட்டியில் கிடைக்க செய்து, நாட்டின் விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான ஊக்கத்தை அளிப்பதாகும்.

இந்த குறுகிய கால பயிர்க்கடனின் முக்கிய அம்சங்கள்:-

* ரூ.3 லட்சம் வரையில் குறுகிய கால பயிர்க்கடன்களை வாங்கி, உரிய காலகட்டத்திற்குள் முறையாக திருப்பி செலுத்துகிற விவசாயிகளுக்கு 5 சதவீத வட்டி மானியத்தை அரசு வழங்கும். எனவே விவசாயிகள் 4 சதவீத வட்டி செலுத்தினால் போதுமானது.

* விவசாயிகள் குறுகிய கால பயிர்க்கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தாவிட்டால், வட்டி மானியம் 5 சதவீதம் என்பது 2 சதவீதமாக குறைக்கப்படும்.

* குறுகிய கால பயிர்க்கடன்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ள இலக்கு ரூ.20 ஆயிரத்து 339 கோடி.

* குறுகிய கால பயிர்க்கடன் ஓராண்டு காலத்துக்கு வழங்கப்படும். இது ஆதார் அடையாள அட்டையுடன் இணைந்த திட்டமாகும்.

* சிறிய விவசாயிகள், விளிம்பு நிலை விவசாயிகள், அறுவடைக்கு பின்னர் விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாத்து வைக்கும் வசதியை பெறுவதற்காக 2 சதவீத வட்டி மானியத்துடன் 6 மாதத்தில் திருப்பி செலுத்தத்தக்கதாக கடன் வழங்கப்படும். இதற்கு விவசாயிகள் 7 சதவீத வட்டி செலுத்த வேண்டும். 
Tags:    

Similar News