செய்திகள்

இது அரசியல் சந்திப்பு அல்ல: மோடியை சந்தித்தபின் நிதிஷ் குமார் பேட்டி

Published On 2017-05-27 14:44 GMT   |   Update On 2017-05-27 14:44 GMT
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த விருந்தில் பங்கேற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இது அரசியல்ரீதியான சந்திப்பு இல்லை என்று தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தார். இதன் தொடர்ச்ச்சியாக, நேற்று சோனியா காந்தி விருந்து அளித்தார். 17 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

அதேசமயம், மொரிஷியஸ் பிரதமர் அனரூத் ஜகநாத் வருகையை கவுரவிக்கும் வகையில் பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்பதற்கு நிதிஷ் குமார் சம்மதம் தெரிவித்தார். இதனால், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் மொரிஷியஸ் பிரதமருக்கு மோடி அளித்த விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் கலந்துகொண்டார். மோடியை சந்தித்து பேசிய அவர், மொரிஷியர் பிரதமரையும் கைகுலுக்கி வரவேற்றார்.

விருந்து நிகழ்ச்சி முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ் குமார், மோடியுடனான சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் என்ற நிலையில் பிரதமரை சந்திக்கவில்லை. மாநில முதலமைச்சராக சந்தித்தேன். இது அரசியல் சந்திப்பு இல்லை. பிறகு ஏன் ஊடகங்கள் அதிகப்படியாக கவனம் செலுத்துகின்றன?

மொஷியஸ் தீவில் உள்ள பாதி மக்கள் பீகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். எனவே, பீகாருக்கும் மொரிஷியசுக்கும் உணர்வுப்பூர்வமான இணைப்பு உள்ளது. மாநில முதல்வர் என்ற முறையில் எனக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். நானும் அதனை ஏற்றுக்கொண்டேன்.

மேலும் பீகாரில் கங்கையை தூர்வாரி சுத்தம் செய்வதற்கு ஜூன் 10-ம் தேதிக்குள் வல்லுநர் குழுவை அனுப்பும்படி பிரதமரிடம் கேட்டுக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த கேள்விகளைத் தவிர்த்த நிதிஷ், உண்மைகளுக்கு மட்டுமே பதில் அளிப்பதாக கூறினார்.
Tags:    

Similar News