செய்திகள்
கோப்புப்படம்

காஷ்மீர்: ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான்

Published On 2017-05-27 07:35 GMT   |   Update On 2017-05-27 07:35 GMT
புர்கான் வானியின் மரணத்தை தொடர்ந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சப்ஸார் அகமது பாட், புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினரால் 8-7-2016 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அந்த இயக்கத்தின் புதிய தளபதியாக சப்ஸார் அகமது பாட் பொறுப்பேற்றுக் கொண்டான்.

இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சிலர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சாமு, டிரால் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த கிராமத்தை தீவிரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். அந்தப் பகுதியை பிறபகுதிகளுடன் இணைக்கும் நாற்புற சாலைகளும் மூடப்பட்டன.



தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டை இன்று காலை வரை நீடித்தது. இந்நிலையில், தீவிரவாதிகளில் இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் ஒருவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளபதி சப்ஸார் அகமது பாட் என்பது தெரியவந்துள்ளது.

இன்று முற்பகல் கிடைத்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு கூடுதலாக பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News