செய்திகள்

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதித்த சாலையோர சமோசா வியாபாரி மகன் - அப்துல் கலாம் போல் வருவேன் என பேட்டி

Published On 2017-05-25 00:28 GMT   |   Update On 2017-05-25 00:28 GMT
சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
ஐதராபாத்:

சாலையோரம் சமோசா விற்கும் வியாபாரியின் மகன் ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையோரம் சமோசா கடை நடத்தி வருபவர் சுப்பா ராவ், இவரது மகன் மோகன் அப்யாஸ், சமீபத்தில் வெளியான ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கான ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கல்வியிலும் கவனம் செலுத்தி, தந்தைக்கு சமோசா வியாபாரத்திலும் உதவியாக இருந்துள்ளார் மோகன். தன்னுடைய இந்த சாதனைக்கு தனது பெற்றோர்களே காரணம் என தெரிவித்துள்ள மோகன், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் தன்னுடைய முன்னுதாரணம் எனவும், அவர் போல ஆக விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையில் ஆய்வு பட்டம் படிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது தந்தையின் தினசரி வருமானம் 500 ரூபாய்க்கும் கீழே என்பது குறிப்பிடத்தக்கது. திறமை இருந்தால் போதும், எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு மோகன் சிறந்த உதாரணமாக இருக்கிறார்.

அது மட்டுமல்ல, மோகன் அப்யாஸ் ஏற்கனவே ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பொறியியல், வேளாண்மை, மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் முதலிடமும், தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பொறியியல், வேளாண்மை, மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வில் ஐந்தாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News