செய்திகள்

அனைத்து மாணவர்களுக்கும் மலையாளம் கட்டாயம் - கேரள சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

Published On 2017-05-24 17:32 GMT   |   Update On 2017-05-24 17:33 GMT
கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டாயமாக மலையாளம் அளிக்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டாயமாக மலையாளம் அளிக்கும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கேரள மாநிலத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்குத் தாய்மொழியான மலையாளத்தில் சரிவர எழுத தெரியவில்லை என்று அங்குள்ள கல்வியாளர்கள் மாநில அரசிடம் புகார் தெரிவித்து இருந்தனர். அரசின் கவனத்துக்கு இந்தகைய புகார்கள் வந்ததை அடுத்து, ஒன்று முதல் பத்து வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயமாக மலையாளம் கற்பிக்க தேவையான சட்டத்தை இயற்ற முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு முடிவெடுத்தது.

கடந்த ஏப்ரல் 5-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசின் பாடத்திட்டத்தில் இயங்கக்கூடிய சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் மலையாள மொழியை கட்டாயப் பாடமாக்கும் வகையில் சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கேற்ப அவசர சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று கூடிய அம்மாநில சட்டசபையில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் முழு ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவில், பள்ளிகளில் மாணவர்கள் மலையாளம் பேசினால் பள்ளி நிர்வாகம் அதை தடுக்கவோ, அபராதம் விதிக்கவோ கூடாது என்ற அம்சமும் இடம் பெற்றுள்ளது.

வேறு நாடுகள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே இச்சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டது. இம்மசோதாவுடன், ரப்பர் இறக்குமதிக்கு வரி விதித்து மாநில ரப்பர் விவசாயிகளை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News