செய்திகள்

அச்சுறுத்தல் எதிரொலி: முலாயம்சிங் தம்பிக்கு மீண்டும் ‘இசெட்’ பிரிவு பாதுகாப்பு

Published On 2017-05-24 07:49 GMT   |   Update On 2017-05-24 07:50 GMT
சிவபால் யாதவ் முதல்-மந்திரியை சந்தித்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்ததையடுத்து, அவருக்கு மீண்டும் ‘இசெட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதசே மாநிலம் சமாஜ்வாடி கட்சியில் முலாயம் சிங்கின் தம்பி சிவபால் யாதவ் முக்கிய தலைவராக இருந்து வருகிறார்.

கடந்த ஆட்சிக்காலத்தின் போது, அவர் மாநில கட்சி தலைவராகவும், மந்திரியாகவும் பதவி வகித்தார். அப்போது அவருக்கு இசெட் பிரிவு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது.

கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியை பிடித்ததை அடுத்து யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரி ஆனார். அவர், பல்வேறு தலைவர்களின் பாதுகாப்புகளை குறைக்கும்படி உத்தரவிட்டார்.

இதன்படி அகிலேஷ் யாதவ், மாயாவதி, சிவபால் யாதவ், டிம்பிள் யாதவ், முன்னாள் மந்திரி அசம்கான் ஆகியோருடைய பாதுகாப்பும் குறைக்கப்பட்டது.

இதில், சிவபால் யாதவின் பாதுகாப்பு இசெட் பிரிவில் இருந்து ஒய் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் சிவபால் யாதவ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-மந்திரியை சந்தித்து புகார் கொடுத்தார். மேலும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் அவருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் போலீஸ் பாதுகாப்பு ஆலோசனை பிரிவும் சிவபால் யாதவுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்படி சிபாரிசு செய்தது.

இதனால் சிவபால் யாதவுக்கு மீண்டும் இசெட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News