செய்திகள்

ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது, சினிமாவில் நடிப்பதே நல்லது: சுப்ரமணியன் சுவாமி

Published On 2017-05-22 12:33 GMT   |   Update On 2017-05-22 12:33 GMT
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் சரிப்பட்டு வராது, சினிமாவில் நடிப்பதே நல்லது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தமிழக அரசியல் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சினை சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்பது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக அரசியல் சரிப்பட்டு வராது, சினிமாவில் நடிப்பதே நல்லது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.



இது குறித்து சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலுக்கு ரஜினிகாந்த் ஏற்றவர் அல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம், அடிப்படை உரிமைகள் முதலியவற்றைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. அவர் சினிமாவில் நடிப்பதே சிறந்தது. நல்ல வசனங்களை பேசி மக்களை சந்தோஷப்படுத்தலாம். 

அரசியலில் நுழையும் நட்சத்திரங்கள் தமிழகத்திற்கு காமராஜ் செய்ததை பாழாக்கி இருக்கிறார்கள். அப்போது போடப்பட்ட அடிப்படை கட்டமைப்பையும் அழித்துவிட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் வீட்டுக்கு முன்பாக தமிழர் முன்னேற்ற படை அமைப்பினர் இன்று போராட்டம் நடத்தியது குறித்து கூறுகையில், “இத்தகைய தமிழ் தீவிர பற்றாளர்கள் பிரிட்டீஷ் மற்றும் திராவிட கொள்கைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். ரஜினிகாந்த் இதனை எதிர்க்க வேண்டும். ஆனால் உறுதியாக சொல்கிறேன், அவர் வெளியேறிவிடுவார்” என்றார்.
Tags:    

Similar News